அருணனை மடியாய் அம்புலி அடியாய்


அருணனை மடியாய் அம்புலி அடியாய்

ஆறிரு மீனினம் முடியாய்

அணிந்த சிங்காரி அலகை சங்காரி

அந்திரம் வான்புவி தாங்கும்


1. அனைத்துயர் ஜீவன் அருகுண தேவன்

அம்புவி வந்தவி னோதன்

அன்னை நீயாகும் அமலம்நீ யாகும்

அடியவர் தாயும்நீ யாகும்


2. இருளினில் கிடந்த எமது முன்னோர்கள்

இகபரி நின்சுதன் மார்க்கம்

இசைந்ததும் உன்னால் இருப்பதும் உன்னால்

இறப்பதும் உன் செயல் அன்றோ


3. இதைவிட வேறு இயம்பிடக் கூறு

இம்மையும் மறுமையும் நீயே

இணையற்ற அன்னை இடருற்ற என்னை

இன்னமும் பாராமுகம் ஏனோ


4. கருணையும் எங்கே கவனமும் எங்கே

கருதும் நின் மைந்தர் நானன்றோ

கடிப்பகை மகிழும் காசினி இகழும்

கௌரவம் யாவுமே பிறழும்


5. கதிவழி மறந்தே கண்ணியம் இழந்தே

கானக விலங்கு போல் அலைந்தே

கண்டதும் கேட்டதும் செய்ததும் பாவம்

கடந்ததை மறந்தருளம்மா


6. திருவருள் புரியும் பொன்விழாச் சமயம்

தீயவன் என் முகம் பாரும்

திருந்துவேன் உண்மை சிறிதொரு புதுமை

செய்யவும் குறைந்து போகாதே


7. திரைகடலோடி திரவியம் தேடி

சிறப்புயர் செழியர் பொன்னாடு

திருமந்திர நகரே திகழும் பொற்சுடரே

திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே